திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.93 பலவகைத் திருத்தாண்டகம்
நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு
    நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
    படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்
    தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்
    பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.
1
ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
    அகத்தாடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
    மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானைத் தொண்மதியும் பாம்பும் நீரும்
    படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்
    நிலாவாப் புலாற்றானம் நீக்க லேமே.
2
பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
    புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறக் கரண முடையோ மென்று
    களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
    நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்
    அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.
3
இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
    ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
    களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
    அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீ ராகிற்
    பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.
4
ஊற்றுத் துறையொன் துள்நின் றோரிர்
    ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழிகொண் டோடா முன்னம்
    மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
    வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்
    துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.
5
கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்
    கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
    நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய
    அருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
    வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.
6
தண்டி குண்டோ தரன்பிங் கிருடி
    சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் றானும்
    பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
    சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
    கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.
7
விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
    வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
    மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
    பங்கயத்து மேலயனும் பரவிக் காணா
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்
    கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.
8
தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
    தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
    கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
    எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
    வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.
9
தந்தையார் தாயா ருடன் பிறந்தார்
    தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
    மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
    திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
    என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com